For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுகவின் ‘பிரம்மாஸ்திரம்’ யார் கையில் கிடைக்கும்...? முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் ஆணையம்!

06:49 PM Nov 27, 2024 IST | Web Editor
அதிமுகவின் ‘பிரம்மாஸ்திரம்’ யார் கையில் கிடைக்கும்     முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் ஆணையம்
Advertisement

அதிமுகவின் பிரம்மாஸ்திரமான ‘இரட்டை இலை’-யின் பின்னணி குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

Advertisement

’’அதிமுக-வின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை…’’ என்று தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் குறிப்பிட்டார், நடிகர் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னம் உணர்வோடு கலந்த ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள்.

சின்னம் வந்த பின்னணி

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய சில நாட்களில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அமைந்த தேர்தலில், அதிமுக சார்பில் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவர்தான் சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து, இரட்டை இலையை சின்னமாக தேர்வு செய்தார். தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி, மாயதேவர் வெற்றி பெற்றார். அன்று தொடங்கி இன்று வரை அதிமுகவின் சின்னமாக இருக்கிறது இரட்டை இலை.

இரட்டை விரலை காட்டுவது ஏன்?

இரட்டை இலையை சின்னமாக தேர்வு செய்தது குறித்து மாயத்தேவர் கூறுகையில், ’இங்கிலாந்து பிரதமரான வின்சென்ட் சர்ச்சில், வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் ஆங்கில எழுத்தான ‘V’ வடிவில் தனது இரண்டு விரலை உயர்த்திக் காட்டுவார். அதேபோல் நாமும் இரட்டை இலை சின்னத்தை குறிப்பிடும் வகையிலும், வெற்றிக்கு அடையாளமாகவும் இரண்டு விரலை காட்டலாம் என்பதால், இந்த சின்னத்தை தேர்வு செய்ததாக’’ தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலைத் தொடர்ந்து, 1974ஆம் ஆண்டு கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் இரட்டை இலையில் நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில், செல்லும் இடமெல்லாம், தொண்டர்களைப் பார்த்து இரட்டை விரலை உயர்த்திக் காட்டி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கே அதிர்ச்சி

அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் ஆதரித்த வேட்பாளரையே வீழ்த்திய வியப்பையும் இரட்டை இலை தந்துள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முதலில் அய்யாசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி ஏ ஃபார்ம், பி ஃபார்மும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவரும் வேட்புமனுத்தாக்கல் செய்தார். கடைகட்டத்தில், முதலில் அறிவிக்கப்பட்ட அய்யாசாமியை ஏற்காமல், அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

இரட்டை இலையிடம் தோற்ற அதிமுக

கட்சியின் முடிவிற்கு மாறாக, வேட்புமனுவை திரும்ப பெறாமல் அய்யாசாமியும் களத்தில் நின்றார். அவருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். அங்கு மட்டும் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரே இங்கு இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம். சிங்கம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் மாநிலம் முழுக்க பெரும்பான்மை இடங்களில் வென்று, ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது தாராபுரம். இரட்டை இலையில் நின்ற அய்யாசாமி வெற்றி பெற்றார். அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இரட்டை இலை முடக்கப்பட்டது ஏன் ?

அதிமுக-வின் மந்திரச் சின்னமாக இரட்டை இலை கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இரட்டை இலை இரண்டு முறை முடக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகியது. கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரு அணிகளாக களமிறங்கினர். இருவரும் உரிமை கோரியதால், இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்பட்டது. அப்போது இரட்டைப் புறா சின்னத்தில் ஜானகி அணியும், சேவல் சின்னத்தில் ஜெயலலிதா அணியும் போட்டியிட்டன. முடிவில் அதிமுக ஜெ. அணி 27 இடங்களிலும், ஜானகி அணி 2 இடங்களில் வெற்றி பெற்றன. தி.மு.க 150 இடங்களில் வெற்றி பெற்று, 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

ஒன்றாகிய இரு அணிகள்

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதுதான் அதிமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்தன. அரசியலில் இருந்து விலகினார் ஜானகி ராமச்சந்திரன். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. இரட்டை இலைச் சின்னமும் மீண்டும் கிடைத்தது. இதையடுத்து 1991ஆம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலையில் மீண்டும் போட்டியிட்ட அதிமுக, மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்தது. ஜெ.ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சரானார்.

மீண்டும் முடக்கப்பட்ட சின்னம்

அதிமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பரில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது மறைவிற்கு பின்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓ.பி.எஸ் அணி என மீண்டும் கட்சி இரண்டாகியது. இருதரப்பும் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டதால், சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். அடுத்த சில மாதங்களில் இரண்டு அணிகள் இணைந்தன. இரட்டை இலையை மீண்டும் வசப்படுத்திக் கொண்டது அதிமுக.

தவிர்க்கப்பட்ட 3வது முடக்கம்

கடந்த 2022ஆம் ஆண்டு எழுந்த ஒற்றைத் தலைமை முழக்கத்தால் இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என்று அதிமுக பிளவுபட்டது. இதையடுத்து 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியதால் மீண்டும் சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பு தனது வேட்பாளரை திரும்பப்பெற்றால், அப்படி சூழலுக்கான வாய்ப்பே ஏற்படவில்லை.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். பலாப் பழம் சின்னத்தில் போட்டியிட்ட அவர், வெற்றி பெறவில்லை என்றாலும் இரட்டை இலையை பின்னுக்கு தள்ளினார். இதற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள் பலரும் அறிந்ததே. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். கட்சியும் சின்னமும் அவரிடமே உள்ளது.

மீண்டும் சிக்கலா?

இந்நிலையில் திண்டுக்கல் சூரியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம், சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது குறித்து 2017-ஆம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதம்

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞர், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையடுத்து முந்தைய நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி செய்யும். உரிமையியல் வழக்குகளின் தீர்ப்பிற்கேற்ப, தேர்தல் ஆணைய நிலைப்பாடு மாறலாம். இதனால் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது இரட்டை இலை. அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு என்பது சார்ந்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். யார் கையில் கிடைக்கப் போகிறது பிரம்மாஸ்திரம்…?

  • - ஜோ. மகேஸ்வரன்
Tags :
Advertisement