For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? சீமான்!

கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
09:12 AM Nov 04, 2025 IST | Web Editor
கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது  சீமான்
Advertisement

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே கடந்த 02-11-2025 ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது.

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுகிறது. பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே தற்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ அடிப்படை காரணமாகும்.

அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க முடியாமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

ஆகவே, கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement