”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” - ராகுல் காந்தி விமர்சனம்..!
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடயே இந்த மாதம் 6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,
”பீகாரில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு தெரியும். எனவே அவர்கள் வாக்கு திருட்டை நாடுவார்கள். மகாராஷ்டிரா, அரியானா மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்கை பாஜக திருடியது, இப்போது பீகார் தேர்தலலிலும் திருட விரும்புகிறது.
ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள், வாக்குத்திருட்டை நடக்க விடமாட்டார்கள். வாக்கு திருட்டு என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்பதை பீகார் அறிந்துள்ளனர். வாக்குகள் திருடப்பட்டால், அனைத்து உரிமைகளும் இழக்க நேரிடும் என்பதை பீகார் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
சத் பூஜையின் போது நரேந்திர மோடி யமுனையில் குளிக்கப் போகிறார் என கூறினார்கள், ஆனால் அவர் குளிப்பதற்கு ஒரு சுத்தமான நீர் குழாய் பொருத்தப்பட்ட சிறப்பு குளம் கட்டப்பட்டது. ஆனால் சுத்தமான நீர் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது ஊடகங்களில் காட்டப்பட்டபோது, நரேந்திர மோடி யமுனையில் குளிக்க மறுத்துவிட்டார்.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நாட்டில் வெறுப்பின் விஷத்தைப் பரப்பியுள்ளனர். பீகார் மக்கள் இதை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, மக்களுடன் சேர்ந்து, சுதந்திரத்திற்காகப் போராடி நாட்டிற்கு ஒரு அரசியலமைப்பை வழங்கியது. இந்த அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர், காந்தி, சர்தார் படேல், நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் என ஒரு சிலர் நாட்டை ஆள விரும்புகிறார்கள், மீதமுள்ளவர்கள் உரிமைகள் இல்லாமல் வாழ்கிறார்கள். மோடி பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.