"அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை மரணம் என்பதால் இந்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஜித்குமாரின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையும் படியுங்கள் : “சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
அஜித்குமார் உயிரிழப்பு சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜீத்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 3, 2025
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழ்நாட்டுக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.