சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனடியாக அறிவித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு 2023 வரை குறுவை, சம்பா என சாகுபடி பருவத்தின் அடிப்படையில் சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இதன் மூலம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு சுமார் 1,000 ஹெக்டேர் அளவிலான சாகுபடிக்காக, இடுபொருட்கள் மற்றும் நடவு செலவு போன்றவற்றுக்கு உதவும் வகையில் ஒரு விவசாயிக்கு 4,000 ரூபாய் என ஒன்றியத்துக்கு சுமார் 5,000 விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டதால் நிதி நெருக்கடியை காரணம் காட்டியும், அதிகப்படியான நெல் உற்பத்தியானதாக காரணம் காட்டியும் அதே ஆண்டில் சம்பா பருவத்திற்கும், இந்த 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்கும் சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
நடப்பு பருவ ஆண்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி 7 முறை நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஓராண்டு காலமாக முழு கொள்ளளவான 100 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாலும், வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பொழிந்து வருவதாலும் விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு, உழவு இயந்திர செலவு உயர்வு போன்றவற்றால் நெல் நடவு செய்வதில் சுணக்கம் காட்டும் விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்பு நிதி வழங்கினால் பேருதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
எனவே, விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிப்பதுடன், இயந்திர நடவு, விவசாய தொழிலாளர்கள் கை நடவு என பாரபட்சம் இல்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 7,000 வழங்க வேண்டும்.அதேபோல் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் என இல்லாமல் குறைந்தபட்சம் 3 ஏக்கருக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும் குத்தகை விவசாயிகளுகம் பலனடையும் வகையில் சம்பா சிறப்பு திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் விரிவு படுத்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.