தவெகவை பாஜக வழிநடத்துகிறது என்பதில் நம்பிக்கை இல்லை - செல்வப் பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலையில் நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகமான சீட்டை கேட்பது குறித்தும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். மற்ற செய்திகளுக்கு எல்லாம் நாங்கள் பொறுப்பு இல்லை. மக்கள் மத்தியில் ஜனநாயகத்தை தலை துவங்க செய்ய வேண்டும். ஜனநாயகத்திற்கு இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அக்கிரமத்தை அநியாயத்தை எதிர்க்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தை பாரதிய ஜனதா கட்சி தான் வழிநடத்துகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.