திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்…
திருநெல்வேலி தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக 7 முறையும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் கட்சியான திமுக 2019-ம் ஆண்டு பெற்ற வெற்றியையும் சேர்த்து, 3 முறை மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒருவேளை தொகுதியை தக்கவைக்கும் முனைப்பில் நெல்லை தொகுதியில் மீண்டும் திமுக-வே களம் கண்டால், அங்கு போட்டியிட நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரஹாம்பெல், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.மற்றொருபுறம் நெல்லை தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கூட்டணி கட்சியான காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி திமுக-விடம் கேட்டு வருவதாக தெரிகிறது. அவர்களின் கோரிக்கையை திமுக ஏற்குமாயின் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டாக்டர் தேவா கேப்ரியல் ஜெபராஜன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் உவரி ஏ.கே ராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரைத்தான் அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவை பொறுத்தவரை நெல்லை தொகுதியில் வேட்பாளராக களம் காண, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கோ அல்லது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கோ வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை பாஜக அமைக்கும் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றால், அக் கட்சியின் தலைவர் சரத்குமார் நெல்லை தொகுதியில் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.