அஜித் விவகாரத்தில் காட்டிய வேகம், கவின் கொலையில் எங்கே? - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கவின் ஆணவக்கொலை மற்றும் தமிழ்நாட்டில் சாதி சார்ந்த பாகுபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
சமீபத்தில் அஜித்குமாருக்காக முதலமைச்சர் நேரடியாக தொலைபேசியில் பேசி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டிய கிருஷ்ணசாமி, அதே தீவிரத்தோடு கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் ஏன் போன் போட்டு பேசவில்லை முதலமைச்சர் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த அணுகுமுறை, அரசு பாகுபாட்டுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். கவினின் குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இந்தச் சம்பவம் குறித்து முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தான் கோரிக்கை விடுத்து வந்தும், திமுக மற்றும் அதிமுக அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்தார். இது போன்ற குற்றங்கள் நடக்கும்போது, ஓட்டுக்காக அரசு இயந்திரம் அதை கண்டுகொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.
சில சாதியினரை "அரிவாள் கலாச்சாரம்" மற்றும் "வீரம் நிறைந்தவர்கள்" என்று கூறி, ஆட்சியாளர்கள் சாதி வெறியைத் தூண்டிவிடுகிறார்கள் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார். இது சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறது. மேலும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என பதவிகளில் இருந்தாலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். காவல்துறையினர் கூட சமமாக விசாரிக்காமல், சாதி பார்த்து செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கலப்புத் திருமணங்களைப் பற்றி அதிகம் பேசும் தமிழ்நாட்டில், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவாக 3 சதவீதம் மட்டுமே கலப்புத் திருமணங்கள் நடப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார். இந்த நிலை, சாதிப் பாகுபாடுகள் இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். இந்த விவகாரத்தை மற்ற சமூகத்தினரும் மனிதாபிமானத்தோடு பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.