For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு எப்போது? - மல்லிகார்ஜுன கார்கே பதில்!

08:13 AM Apr 28, 2024 IST | Web Editor
ரேபரேலி  அமேதி தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு எப்போது    மல்லிகார்ஜுன கார்கே பதில்
Advertisement

ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என  மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.  இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1-ல் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு மே 20ம் தேதி (5ம் கட்ட தேர்தல்) தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ரேபரேலியில் கடந்த முறை சோனியா காந்தி வென்ற நிலையில் தற்போது ராஜ்யசபா எம்பியாகி விட்டார்.  இதனால் ரேபரேலியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல் கடந்த முறை அமேதியில் தோற்ற ராகுல் காந்தி மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் ரேபரேலி,  அமேதி தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.  பாஜவை பொறுத்தவரை அமேதியில் கடந்த முறை வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல பிரியங்கா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட முடியாது என பாஜ மேலிடத்திடம் அக்கட்சியின் எம்பியும் ராகுல் காந்தியின் சித்தப்பா மகனுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.  இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது..

'அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படுவர்'.  ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பாஜக கூறுகிறது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன், மாநிலங்களவை அல்லது சட்டபேரவை உறுப்பினர்களாக ஆகிவிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதியை மாற்றுவது குறித்து கேள்வி எழுப்புபவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், அத்வானியும் எத்தனை முறை தொகுதியை மாற்றினர் என்பதை முதலில் கூறவேண்டும். பொய்யர்களின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என பல பொய்களை பிரதமர் மோடி கடந்து முறை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும். ஆட்சி அமைந்ததும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுவதோடு, அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்' என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags :
Advertisement