“செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்... நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” - இபிஎஸ் விமர்சனம்
அமைச்சர் உதயநிதி செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்?, நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
“தேர்தலில் போட்டி என்றால் திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை நாடு அறியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்று பிரதமரை பற்றி விமர்சிப்பார். இல்லையென்றால் என்னைப் பற்றி பேசுவார். வேறு எதுவும் பேசமாட்டார். உதயநிதி ஒரே செங்கல்லை எடுத்து மூன்று வருடமாக காட்டிக் கொண்டு உள்ளார். செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்.நீட் யார் ஆட்சியில் கொண்டு வந்தது? நீட்டை கொண்டு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள்ஒதுக்கீடு நாங்கள் கொண்டு வந்தோம். 2,160 ஏழை மானவர்கள் இன்று மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரம் தேவை. இங்கு குடும்ப கட்சி நடத்துவது போல், அங்கும் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக, மக்களை பற்றி யோசிக்கவே இல்லை. இவர்களுக்கு எண்ணம் எல்லாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பதவி வேண்டும்.
இதையும் படியுங்கள் : ஜெயம் ரவியின் ‘ஜீனி’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக், வெளிநாட்டிற்கு போதை கடத்தி வந்தவர். எந்த கட்சியிலாவது அயலக அணி என்று உண்டா? கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2,138 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலினே அவைக்குறிப்பில் கூறியுள்ளார். ஆனால் 138 பேர் தான் கைது என்கிறார். அப்படி ஆனால் மீதி நபர்கள் என்ன ஆனார்கள்?நான் நினைத்திருந்தால் 4 ஆண்டுகளில் உங்கள் அமைச்சர்கள் எத்தனையோ பேர் மீது வழக்கு போட்டிருப்பேன். ஆனால் பொறுமையாக இருக்கிறேன். அனைத்தையும் சேர்த்து வைத்து இருக்கிறேன். உங்களது மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயந்தவர்கள் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் திமுகவிற்கு மரண அடியாக இருக்க வேண்டும். இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்.”
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.