“கடைகோடி தொண்டனை வைத்து அண்ணாமலையை வீழ்த்துவோம்” - அமைச்சர் சேகர்பாபு!
சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு,
“ஒன்றியத்தின் இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது பிறந்த நாளை ஆடம்பரமாக இல்லாமல், மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று நல்வழிப்படுத்தி காட்டியுள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வகையில் இன்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின் இல்லாமை என்பது ஒருபுறம் இல்லாமல் போனது. மழலைச் செல்வங்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அளித்தவர் நம்முடைய முதல்வர்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் அன்னதான பிரபு எங்கள் தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மூன்று கோடியே 50 லட்சம் பேர் அன்னதான திட்டத்தால் ஒரு ஆண்டிற்கு பயனடைந்து வருவதாகவும், ஒரு ஆண்டுக்கு ரூ.112 கோடி இந்த திட்டத்துக்கு மட்டும் செலவாகிறது. ஒருவேளை அன்னதான திட்டம் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 27 கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
50 பேருக்கு என்று இருந்த அன்னதானத் திட்டத்தை பல இடங்களில் 100 பேருக்கு என்று மாற்றியமைத்து உள்ளோம். திருவிழாக்களில் இருநூறு என்ற அளவில் இருந்ததை 500 என்று அளவு எண்ணிக்கை அளவுகளை உயர்த்தி இருக்கிறோம்.
சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளில் சுழற்சி முறைகளில் இரண்டு இடங்களாக பிரித்து 500 பேருக்கு 500 பேருக்கு என்ற வகையில் உணவு வழங்கப்பட உள்ளது.
நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் அண்ணாமலை போன்றோருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்குமா? ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு அது முடியாத காரணத்தினால், ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.
எங்கள் இயக்கம் அடிக்க அடிக்க உயரும் பந்து. தீட்ட தீட்ட ஒளி தரும் வைரம். காய்ச்ச காய்ச்ச மெருகேறும் சொக்கத்தங்கம். அதனால் அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கட்டும். எங்கள் இயக்க தோழர்கள் இன்னும் விறுவிறுப்போடு வீறுநடை போடுவார்கள்.
முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும். அப்படி நின்றால் அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் கடைகோடி தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்” என்று கூறினார்.