“தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை இன்று (07.03.2024) தொடங்கி வைத்தார். மேலும் சென்னை மாநகராட்சியின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேயர் சிட்டிபாபு பூங்காவில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வித் தொகை ஆகியவற்றையும் வழங்கினார். பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதவது:
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றியுள்ளோம். யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.
பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8. மகளிர் முன்னேற்றத்திற்கு திமுக அரசு பல திட்டங்களை தீட்டு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.
தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டத்தை மத்திய அரசின் உதவி இல்லாமல் செய்கிறோம். மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும். காலம் கனிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.