தமிழ்நாட்டிலும் SIR : தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடக்கம்..!
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இக்கூட்டம் தொடங்கியுள்ளது.
இதில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்,பாஜக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 12 கட்சிகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.