“இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்” | அதிமுக IT அணி ஆலோசனைக் கூட்டத்தில் #EPS பேச்சு…
10% வாக்குகளை இழந்துவிட்டோம், அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும் என அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில், அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக. செய்தித்தாளில் தான் செய்திகளை அறிந்து கொண்டிருந்த காலம் மாறி வலைத்தளங்கள் மூலம் செய்திகள் ஒரு நொடியில் சென்று சேர்கிறது. ஊடகம்,பத்திரிகைகளும் வேண்டுமென்றே பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த பொய் செய்திகளைத் தகவல் தொழில்நுட்ப அணி தான் முறியடிக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் அனுமதி கொடுத்த ஊடகங்களே எங்கள் நெஞ்சில் குத்துகின்றன. கடைசிக் கட்டத்தில் இருக்கும் மக்களுக்குக் கூட நாம் செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும். கட்சி குறித்துப் பரப்பப்படும் பொய் செய்திகளை முறியடிக்கும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறோம். இதற்கு முன்னர் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி வேகமாகச் செயல்பட வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 15 மாத காலம் தான் இடைவெளி உள்ளது . நீங்கள் எந்த அளவுக்குப் பணி செய்கிறீர்களோ வலைத்தளம் மூலம் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்கிறீர்களோ அந்த அளவுக்கு கட்சிக்கு பலம் சேர்க்கிறீர்கள். மண்டல செயலாளர்கள் மாவட்ட செயலாளர் உடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை செய்ய வேண்டும் . மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். கடைசி கட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அதிமுக செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும். 10 சதவிகித வாக்குகளை இழந்து உள்ளோம். அதனை மீட்டு எடுக்க வேண்டும்.
மாநிலத் தலைமையிலிருந்து கிடைக்கும் அனைத்து தகவல்களும் வாக்குச்சாவடி முகவர் வரை கொண்டு சேர்க்க வேண்டும். தனித்திறமைகளைக் கொண்டு யூடியூப் சேனல்கள் துவங்கி அதிமுக செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பேஸ்புக் எக்ஸ் தளம் மட்டும் அல்லாமல் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வாயிலாகப் பதிவிட வேண்டும்.
உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் பதிவுகளும் என்னுடைய பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது . என்னுடைய நேரடி மேற்பார்வையில் தான் நீங்கள் இருக்கின்றீர்கள்
என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளும் உங்களை அடக்கிக் கொள்ளாதீர்கள் . உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் காணொளிகளாகப் பதிவிட வேண்டும்.
சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருக்கிறோம். மாநில நிர்வாகிகள் அளிக்கும் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். நம்முடைய இலக்கு 2026. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம். மாவட்டச் செயலாளர் உடைய பணிகளைக் காணொளிகளாகப் பதிவிடுவது தகவல் தொழில்நுட்பணியின் பணி கிடையாது கட்சியின் செயல்பாடுகளைச் சொல்லுங்கள், பிரச்சனைகளைப் பதிவு செய்யுங்கள்.