“மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” - அமைச்சர் துரைமுருகன்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் நமது என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிச்சயமாக வெல்வார். தமிழகத்தில் முதலில் மொழியை அழிக்க வேண்டும், மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். இந்தியை எதிர்ப்பதில் எல்லோரும் இறந்து போய், தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை கூட இந்தி ஒழிக என்று கூறும். அந்தக் குழந்தையும் இறந்து போனால், தமிழகத்தில் இருக்கக்கூடிய காகம், பருந்து இந்தியை எதிர்க்கும் என்று பட்டுக்கோட்டை அழகிரி உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார் என்று கருணாநிதி எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்.
மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது அவர்கள் திட்டம். எங்களுக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. கல்வி மற்றும் நூறு நாள் வேலைத்
திட்டத்திற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. இவ்வளவு நிதியை தரவில்லை என்றால் மு.க.ஸ்டாலின் என்ன செய்வார். ஐயோ இப்படி பண்ணி விட்டீர்களே அரசு திண்டாடும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வார் என்று எதிர்பார்த்தனர்.
மத்தியில் சி.சுப்பிரமணியம் நிதி அமைச்சராக இருந்தபோது வறட்சி தொடர்பாக நிதி பெற்றபோது கருணாநிதியிடம் கணக்கு கேட்பேன் என்றார். நீங்கள் நிதி அமைச்சராக இருக்கும் வரை நான் பணம் கேட்க மாட்டேன் என்று கருணாநிதி சொன்னார்.
அதே தைரியம் எங்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தட்டும். தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும். மொழியைக் காட்டி பயமுறுத்தினர், பணத்தை தர மாட்டோம் என்று பயமுறுத்தி
பார்த்தனர். இரண்டுக்கு பிறகு தேர்தலில் இவர்களை தோற்கடிக்க முடியாது, ஆகையினால் யாரை பிடிக்கலாம் என்று பார்த்தார்கள். தமிழகத்தில் இருப்பது இரண்டு கட்சிகள் (திமுக - அதிமுக) தான். மற்றவைகள் எல்லாம் கட்சிகள் இல்லை.
பாஜக பக்கம் அதிமுக செல்லுமா என்று எடப்பாடி பழனிசாமி இடம் கேட்டனர். கிழக்கு பக்கம் உதிக்கின்ற சூரியன் மாற்றி உதித்தாலும் போகமாட்டேன் என்றார் முதலில். இப்போது சும்மா டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்து வந்ததாக கூறுகிறார். நீங்க மட்டுமா, இல்லை நான்கு பேருடன் சென்று வந்தேன் என்றார்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அதிமுக பாஜக ஒரே அணியில் சேரும்.
ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், சசிகலா கூட்டத்தை சேர்க்க மாட்டேன் என்று கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி, கெட்டிக்காரர்தான். இவர்களை சேர்த்தால் நான் ஒழிந்தேன் என்கிறார். இது பற்றி நானும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜக, அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார். ஓபிஎஸ் சசிகலாவை சேர்க்க செங்கோட்டையன் சென்று வந்தார் எனப் பேசினோம்” எனக் கூறினார்.