உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.98 லட்சம் வழங்கியதா? குடும்பத்தினர் கூறுவது என்ன?
உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திலிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக அக்னிபாத் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். நாட்டை காக்கும் பணியில் உயிரிழக்கும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர், தன்னுடைய மகன் இறந்து 6 மாதம் ஆன நிவையிலும் மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திடமிருந்தோ இதுவரை தங்களுக்கு எந்த இழப்பீட்டு தொகையையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து உயிரிழந்த அக்னிபாத் வீரர் அஜய் சிங்கின் தந்தை சரண்ஜித் சிங் கலா கூறுகையில், "இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையிலிருந்து நாங்கள் ரூ.98 லட்சம் பெற்றுள்ளோம். இதில் ராணுவத்திடமிருந்து ரூ.48 லட்சத்திற்கான காசோலையும் அடங்கும். இது காப்பீட்டுத் தொகையாக இருக்கும், இழப்பீடு அல்ல. மேலும் ரூ.50 லட்சம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுவும் எனது மகன் வைத்திருந்த காப்பீட்டு பாலிசியின் தொகைதான்.
பஞ்சாப் அரசு எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியதாக ராஜ்நாத் சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுவரை மத்திய அரசிடமிருந்தோ அல்லது ராணுவத்திடமிருந்தோ எங்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
லூதியானாவை சேர்ந்த அக்னி வீரர் அஜய் சிங் கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் ஏற்பட்ட கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த மே மாதம் பாரத் ஜடோ யாத்திரையின்போது அஜய் சிங்கின் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.