Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
05:57 PM Oct 29, 2025 IST | Web Editor
தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

அதிமுக பொதுச்செயளாலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

“தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

எனவே, மக்களைக் காக்க உடனடியாக கீழ்க்கண்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுப்பதுடன், உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உள்ளாட்சிப் பணியாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளித்தல்; சாக்கடைகளில் கொசு மருந்து அடிப்பது போன்ற முறையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்பதை விசாரித்து, காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும்.

எப்போதுமே 'தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக' மக்கள் பாதிக்கப்பட்டபின் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறாமல், இனியாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்று திமுகஅரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKdengufeverEPSlatestNewsTNGovermentTNnews
Advertisement
Next Article