வக்பு மசோதா - நீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் முடிவு!
வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா கடந்தாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சி மக்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பபட்டது.
பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியிலிருந்து இருந்து 16 எம்.பி.க்கள் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர். அதே போல் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து 10 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் திமுக எம்பி ஆ.ராசா, அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், நேற்று (ஜன.27) இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. இதில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு, நாளை (ஜன.29) இதற்கான அறிக்கை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வக்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அனைத்தையும் மீறி வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.