டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, காங்கிரஸ் 70 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டுள்ளது.
பாஜக 68 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லியில் 5 மணி நிலவரப்படி 57.70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
டெல்லியில் 837,617 ஆண்கள், 723,656 பெண்கள் மற்றும் 1,267 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உட்பட 1,561,400 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மூன்று கட்சிகளும் பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளன. குறிப்பாக தேர்தலில் வெற்றிப் பெற்றால் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது.
பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ரூ.2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதில் ஆம் ஆத்மி ஹாட்ரிக் வெற்றி பெறுமா இல்லை பாஜகவின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறுமா என்பது வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். 68 இடங்களில் போட்டியிடும் பாஜக, கடந்த 28 ஆண்டுகளாக டெல்லியில் அதிகாரத்தில் இல்லை. தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியது.