”மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” - சோனியா காந்தி உருக்கம்!
மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் வரும் நவ. 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸிற்கு வாக்குகளிக்குமாறு மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது,
”மிசோரம் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் பல வருடங்களில் பலமுறை மிசோரம் சென்று வந்துள்ளேன். உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரம், உங்கள் நிலத்தின் அழகு மற்றும் செழுமை ஆகியவை என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் அரவணைப்பையும், பாசத்தையும் நான் மறக்கவில்லை.
ஜூன் 30, 1986 அன்று வரலாற்று சிறப்புமிக்க மிசோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே எனது குடும்பத்தினருடன் மிசோரம் சென்றதை நான் மிகவும் விருப்பத்துடன் நினைவுகூர்கிறேன். இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் ரெம்னா நி என்று கொண்டாடப்படுகிறது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் மிசோரம், வடகிழக்கு மற்றும் இந்தியா முழுவதிலுமான ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் பன்முகத்தன்மையையோ, ஜனநாயகத்தையோ, உரையாடலையோ மதிப்பதில்லை. அவர்கள் இந்தியா முழுவதும் ஒரே சீரான நிலையைத் திணிக்க விரும்புகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் பழங்குடியினரின் நிலங்கள் மற்றும் காடுகளின் மீதான உரிமைகளை பலவீனப்படுத்தும் சட்டங்களை பாஜக வலுக்கட்டாயமாக கொண்டு வருகிறது. மணிப்பூர் சமூகத்தை பாஜக கசப்பான முறையில் பிளவுபடுத்தியுள்ளது. அம்மாநிலம் ஆறு மாதங்களை துன்பங்களோடு கடந்துவிட்ட போதிலும் கூட, அங்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இதையும் படியுங்கள்: நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறதா ஜவான் திரைப்படம்? -லேட்டஸ்ட் அப்டேட்…
மிசோரமில், MNF மற்றும் ZPM போன்ற பிராந்திய கட்சிகள் சுதந்திரமானவை என கூறுகின்றன, ஆனால் அக்கட்சிகள் உண்மையில் உள்ளனரா? என்பதே கேள்வியாக உள்ளது. அவை பாஜகவுக்கு மிசோரமுக்குள் நுழையும் நுழைவாயில்களாகவே செயல்படுகின்றன. பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மிசோரமின் வளர்ச்சிக்கும், அதன் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சமூகத்தில் நலிந்தோருக்கான பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க முடியும். கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலத்தில் நீங்கள் பார்த்தது போல் நாங்கள் எங்கள் உத்தரவாதங்களை மிசோரமிலும் வழங்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய அரசியலமைப்பு விதி 371-G -ல் குறிப்பிடப்பட்டுள்ள மிசோ வாழ்க்கை முறை பாதுகாப்பிற்காக நாங்கள் துணை நிற்போம்.
எனவே, மிசோரம் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். சோதனைகளுக்கு இது நேரமில்லை, அனுபவத்தின் கரமாகவும், பாதுகாப்பின் கரமாகவும் விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்”. இவ்வாறு சோனியா காந்தி, காங்கிரஸிற்கு வாக்களிக்கக்கோரி மிசோரம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.