கரூர் துயரம் : தவெக அலுவலகத்தில் விசாரணை செய்த சிபிஐ... சிசிடிவி ஆதாரங்களை கோரியதாக இணைப் பொதுச் செயலாளர் விளக்கம்..!
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரனை கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் 3டி டிஜிட்டல் சர்வே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கூட்டம் நடைபெற்ற சாலையின் துல்லியமான பருமன், மக்கள் நிற்கக்கூடிய அதிகபட்ச திறன் போன்ற விவரங்கள் கணக்கிடப்பட்டனர்.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனை தொடர்ந்து தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர், “கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர்; சிசிடிவி ஆதாரங்கள், பரப்புரையில் கலந்துக்கொண்டவர்களின் விவரங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர்; 3 நாட்களுக்குள் ஆதாரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவோம்; நாங்கள் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டால் எங்கள் தரப்பில் ஆஜராகி விளக்கம் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.