"கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்" - அண்ணாமலை புகழாரம்!
மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரை உலகினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து விஜயகாந்தின் நினைவுகள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.