For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி...!

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
08:59 PM Dec 13, 2025 IST | Web Editor
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்   எடப்பாடி பழனிசாமி
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

Advertisement

”மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது. வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும் பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை. மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன். எனினும், தொடர்ந்து இந்த திமுக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம். இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம் செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலத்தில் நிதியை விடுவிக்காத திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement