71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் 3104 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம், கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதையும் படியுங்கள்: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதன் காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.6) காலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடி எட்டியது. வைகை அணைக்கு வினாடிக்கு 3104 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அவை முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட உள்ளது. இதன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.