உத்தரகாண்ட் - ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் பாஜக இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடி நாட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிவாகை சூடியது வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவ்விரு கட்சிகள் தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 தொகுதியும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தொகுதியில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதியின் தன்மையை பொறுத்தவரை, ஒருமுறை பாஜகவும், அடுத்த முறை காங்கிரசுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 2002ம் ஆண்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து 2007ல் பாஜகவும், 2012ல் காங்கிரசும், 2017ல் பாஜகவும், 2022ல் காங்கிரசும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், 2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த தொகுதியிலும் 2002லிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சிதான் வென்றிருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த சார்வாட் கரீம் அன்சாரி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால், 2012 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 தேர்தலிலும் பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 68.24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று இரண்டு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்பட்ன. இந்நிலையில், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் லக்கபாட் சிங் புடோலோ வெற்றி பெற்றார். அதே போன்று, மங்களூர் தொகுதியிலும் காங்கிரஸின் முகமது நிஜாமுதீன் வெற்றி பெற்றார்.
உத்தரகாண்டில் ஆளும் கட்சியாக பாஜக இருக்க, இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருப்பது பாஜகவுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.