மத்திய பட்ஜெட் 2024-25 : விலை குறையும் மற்றும் விலை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியல்!
மத்திய பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விலை குறையும் மற்றும் விலை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியல் குறித்து விரிவாக காணலாம்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.
இதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் தாக்கல் செய்த 7-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு, 9துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம், மொபைல் மற்றும் சார்ஜர் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்பு வெளியானாலும் வருவாமன வரி உச்ச வரம்பில் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அளித்துள்ளதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எந்தெந்த பொருள் மற்றும் துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது மற்றும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.
வரி குறைப்பு :
- மொபைல் போன்கள், சார்ஜர்கள் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு சுங்க வரி 15 சதவீதமாக குறைப்பு
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று முக்கிய மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கு வரி விலக்கு
- இ-காமர்ஸ் மீதான டிடிஎஸ் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைப்பு
- 25 முக்கியமான கனிமங்களான லித்தியம், தாமிரம், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு
- மீன், இறால் மற்றும் மீன் தீவனங்கள் மீதான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைப்பு
- இறால் மற்றும் மீன் தீவனம் தயாரிப்பதற்கான பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு
- அம்மோனியம் நைட்ரேட்டின் அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- ரெசிஸ்டர் தயாரிப்பதற்கான ஆக்ஸிஜன் இல்லா காப்பருக்கான அடிப்படை சுங்க வரி நீக்கம்
- அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் போன்ற துறைகளுக்கான 25 முக்கியமான கனிமங்கள் மீதான சுங்க வரிகள் முழுமையாக விலக்கு
வரி அதிகரிப்பு
- அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10 சதவீதமாக அதிகரிப்பு
- மக்காத பிளாஸ்டிக்குகளுக்கு சுங்க வரி 25 சதவீதமாகவும் அதிகரிப்பு
- குறிப்பிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு
- 10 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய பொருட்களை விற்பனை செய்தால் 1 சதவீதம் டிசிஎஸ் வரி விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது
- புதிய வரி விதிப்பின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ₹ 50,000 லிருந்து ₹ 75,000 ஆக உயர்த்தப்படும்