“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” - டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார்.
‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்ட மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது,
“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. பாஜக அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கி வருகிறது. பாஜகவுக்கு பயந்து அவர்களுடன் கூட்டணி அமைத்தால் அவர்களை பாஜக பாதுகாக்க முயற்சிக்கிறது. அதுவே பாஜகவை எதிர்த்து நின்றால் அவர்களை சிறையில் தள்ளுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய கூட்டணியின் முக்கியமான தலைவர்கள். தொடர்ந்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் அனைவரும் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கோட்டையில் இந்தியா கூட்டணியின் பிரதமர் தான் கொடியேற்ற போகிறார்”
இவ்வாறு தெரிவித்தார்.