திருப்பதியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி - ஒருவர் கைது!
திருத்தணி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது கஞ்சா கடத்திவந்த நபரை மடக்கி பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக எல்லைக்கு பகுதியான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து தமிழக அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்தது. அந்த பேருந்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் பையில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் (27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.