இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் - மூன்று பேர் கைது!
ஆதம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரு நபர், தனது காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட மூன்று நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான சண்முகம் (43), ஆதம்பாக்கம் காந்தி நகரில் வசித்து வருபவர். அவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். அவருடைய அத்தை மனோன்மணி (80) காலமானதால், காலை இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் நின்றிருந்த சண்முகத்திடம், டேனியல்ஜோசப் என்ற நபர் தனது நண்பர்களான அரவிந்தன் (எ) அமர் மற்றும் பரத் (எ) கபாலி ஆகியோருடன் வந்துள்ளார். அப்போது, டேனியல்ஜோசப், சண்முகத்தின் அத்தையின் பேத்தியைக் காதலிப்பதாகவும், அந்தக் காதலுக்கு சண்முகம் இடையூறாக இருப்பதாகவும் கூறி தகராறு செய்துள்ளார். மேலும், "ஏன் இறுதிச் சடங்கில் நீ கலந்து கொண்டாய்?" என்று கேட்டு, சண்முகத்தை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இந்தச் சண்டையின் முடிவில், மூன்று பேரும் சேர்ந்து பீர் பாட்டில்கள் மற்றும் கற்களைக் கொண்டு சண்முகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் இரத்தக் காயங்களுடன் சண்முகம் அங்கேயே சரிந்து விழுந்தார். பொதுமக்களின் உதவியுடன், அவர் உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உள்நோயாளியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட டேனியல்ஜோசப், அரவிந்தன் (எ) அமர் மற்றும் பரத் (எ) கபாலி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டேனியல்ஜோசப், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேட்டில் உள்ள குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா வழக்குகள் உட்பட மொத்தம் எட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல, அரவிந்தன் (எ) அமர் மற்றும் பரத் (எ) கபாலி ஆகியோர் மீதும் தலா ஒரு அடிதடி வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்படவுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.