மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் - ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி!
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
18வது மக்களவையின் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் முந்தைய மக்களவையின் தலைவரான ஓம் பிர்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் நிறுத்தப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு இன்று (ஜூன் 26) தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுவரை, மக்களவைத் தலைவரை தேர்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 25) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எனவே, மக்களவை தலைவர் பதவிக்கு இரு தரப்பிலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல, ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் கொடிக்குன்னில் சுரேஷுக்கு ஆதரவாக 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளனர். ‘இந்தியா’ கூட்டணிக்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், 542 மக்களவை உறுப்பினர்களே மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதுகுறித்து கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில், “மக்களவைத் தலைவர் பதவியை ஆளும் கட்சிக்கும், துணைத் தலைவர் பதவியை மக்களவை எதிர்க்கட்சிக்கும் வழங்குவதுதான் மரபு. ஆனால், கடந்த இரண்டு மக்களவைகளிலும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் அங்கீகரிக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி மக்களவை துணைத் தலைவர் பதவியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது, மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே, மக்களவை துணைத் தலைவர் பதவியைப் பெறுவது காங்கிரஸின் உரிமை.
ஆனால், அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதற்காக நேற்று காலை 11.50 மணி வரை காத்திருந்தோம். ஆனால், எந்தப் பதிலையும் மத்திய அரசு வழங்கவில்லை’ என தெரிவித்தார்.