For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு!

01:48 PM Nov 17, 2023 IST | Web Editor
விவசாயிகள் மீது குண்டர் சட்டம்  திருவண்ணாமலையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்   அண்ணாமலை அறிவிப்பு
Advertisement

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலையில் நாளை போராட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை 2-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த போராட்டத்தின் 124-வது நாளான கடந்த 2-ம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,  வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகாவிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தனது எதிர்ப்பை காட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023), பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement