இந்திய அரசியலமைப்பு தினம் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று கொண்டாட்டம்
1947ல் விடுதலை பெற்ற இந்தியாவுக்கான தனி அரசியலமைப்பை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டத்தை 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. இதனை நினைவு கூறும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை கௌரவிப்பதற்கும், குடிமக்களிடையே அரசியலமைப்பு மீதான உரிமைகள் மற்றும் கடமைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ( நவம்பர் 26) பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை தாங்கும் இந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டமன்றத் துறையால் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா மற்றும் அசாமி ஆகிய ஒன்பது மொழிகளில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படுகின்றது.