“அதிமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கலாம்” - ஜோதிமணி எம்.பி. விமர்சனம்!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதையடுத்து ஜோதிமணி எம்.பி. செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் கூறி இருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. அதனை வரவேற்கிறேன். அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, அரசியலில் இருப்பவர்கள், அரசியல் இல்லாத ஆண்களோ பெண்களுக்கு எதிராகவும், எந்த சமூகத்திற்கு எதிராகவும்,
கன்னியமற்ற, தரமற்ற வகையில் பேசக் கூடாது.
இது தொடர்பாக திமுக சார்பில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டாக செயல்பட வேண்டும். எப்போதும் பாஜகவுடன் கூட்டணியில் சேர மாட்டோம் என்று வீர வசனம் பேசிய அதிமுக, இன்று வேறு வழியில்லாமல் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து
இந்த கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
பொதுவாக மாநில கட்சிகள் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பொது மாநிலக் கட்சியின் தலைவர் தான் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால், துரதிஷ்டவசமாக அதிமுக பொதுச் செயாலளர் எடப்பாடி பழனிச்சாமியை ஓரமாக உட்கார வைத்து விட்டு, அமித் ஷாவே மொத்த கூட்டணி Terms & Conditions எல்லாம் சொல்கிறார். அதில் தெளிவாக பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்கிறார். ஆட்சிக்கு வந்தால் தானே கூட்டணி ஆட்சி அமைக்க முடியும், நிச்சயமாக திமுக தலைமையிலான ஆட்சி தான் மீண்டும் 2 வது முறையாக அமைக்கும்.
பாஜக எந்த மாநிலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சியை வேரோடும் அழித்து விடுவார்கள். அந்த இடத்திற்கு பாஜக வரும். நீண்ட காலம் தமிழ்நாட்டில் இருந்த கட்சி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி இதுவே, அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன், இது வருத்தத்திற்குரியது”
இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.