“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கையால் ஒன்றிய கூட்டணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று (ஏப். 5) காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அத்துடன் காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள் சில அடங்கிய படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA!
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி,
மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது @INCIndia வெளியிட்டுள்ள 2024… pic.twitter.com/JnVnuOOOMB— M.K.Stalin (@mkstalin) April 5, 2024
“அதிமுக அடகு வைத்த, பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்! நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி!” என பதிவிட்டுள்ளார்.