For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல... தானா சேர்ந்த படை...” - கோவையில் அண்ணாமலை பேச்சு

07:08 AM Feb 23, 2024 IST | Jeni
“இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல    தானா சேர்ந்த படை   ”   கோவையில் அண்ணாமலை பேச்சு
Advertisement

பாஜக தொண்டர்கள் காசு கொடுத்த சேர்த்த படையல்ல என்றும், தானாக சேர்ந்த படை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Advertisement

தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வி.கே.கே. மேனன் சாலை வரை யாத்திரையாக சென்றார். இதில் அண்ணாமலையுடன் மத்திய இணையமைச்சர்கள் எல்.முருகன்,  ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :

“மேடையில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மக்களின் பிம்பமாக இருக்கிறார்கள். மக்களுக்கு தோளோடு தோள்கொடுப்பது, தலைவர்களாக மாற்றுவதே எங்களது வேலை. சிறு குறு தொழில்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.  கோவையில் இன்று எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு காரணம் பிரதமர் மோடி.இதுவரை இல்லாத அளவுக்கு வரும் 27-ம் தேதி 15 லட்சம் பேர் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ நிறைவு விழாவில் பங்கேற்பார்கள். பல்லடத்தில் நடைபெறும் நிறைவு விழா திருவிழாவைப் போல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உட்பட இதுவரை யாரும் நினைத்துக்கூட பார்த்திராத பொதுக்கூட்டத்தை நாங்கள் பல்லடத்தில் நடத்துவோம். 2021-க்கு பிறகு பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பேசும் முதல் அரசியல் பேச்சு அந்த மேடையில் இருக்கும். தமிழ்நாட்டில் 2024-ல் மாற்றம் வரும். அந்த உணர்வு தெரிகிறது. இந்த யாத்திரையின் நிறைவு நாள் அதை உணர்த்தும்.

வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் இவர்களை எவ்வாறு சமாளிக்கிறார் என்று தெரியவில்லை. வானதி சீனிவாசனை சமாளிக்க முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளம்பி வந்திருக்கிறார். பாஜக எம்.எல்.ஏ. நேற்று கேட்ட கேள்விக்கு, முதலமைச்சர் இன்று பதில் கூறியிருக்கிறார். மற்ற தொகுதி எம்.எல்.ஏ.-க்களுக்கு உதாரணமாக வானதி சீனிவாசன் இருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு சோறு பதமாக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருக்கிறார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் போன்று, 234 தொகுதிகளிலும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தால் எவ்வாறு இருக்கும் என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

‘என் மண் என் மக்கள்’ சாதாரண யாத்திரை இல்லை. இது ஒரு கடுமையான யாத்திரை. ஒரு பெரிய படையோடு, ஒரு சேனையோடு யாத்திரையின் இறுதிக் கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நமக்கு பின்னால் இருக்கும் படை, காசு கொடுத்து சேர்ந்த படையல்ல. தானாக சேர்ந்த படை. 2024-ம் ஆண்டு நம்முடைய காலம்.ஒவ்வொரு தலைவரும் அண்ணாமலை பூச்சாண்டி , மாயாவி, லேகியம் விற்பவன் என்கின்றனர். பூச்சாண்டி என்றால் திருநீறு பூசிக்கொண்டிக்கிற ஆண்டி. பூச்சாண்டி என்ற பட்டத்தை பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். மாயாண்டி என்றால் தென்தமிழகத்தில் குலதெய்வம். தமிழக மக்களின் குலதெய்வமாக, காவல் தெய்வமாக மோடி இருக்கிறார். எனவே மாயாண்டி என்றாலும் பரவாயில்லை. 27-ம் தேதி பெரிய பாட்டிலில் லேகியம் விற்கப் போகிறோம். ஊழல் ஆட்சிக்கு, குடும்ப ஆட்சிக்கு அந்த லேகியம் தான் மருந்து.

சாராயம் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என கூறி இருக்கிறார்கள். திமுகவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஐம்பதாயிரம் கோடி என வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள். ஆமை புகுந்த வீடும் திமுக ஆளுகின்ற மாநிலமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். 2024-ல் இருந்து யாரும் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள். தமிழகத்தில் வேல் யாத்திரை காலத்திலேயே பாஜக 20% தாண்டி விட்டோம். வரும் தேர்தலில் 33% தாண்டி பாஜக வாக்குகளை பெறும். தலைகீழாக எதிர்க்கட்சிகள் தோப்புக்கரணம் போட்டாலும் கூட, பாஜக ஆட்சியை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பாஜக ஆளும் மாநிலங்களில்
குறைவு. வளர்ச்சிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தினமும் திமுக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட் அதற்கு ஒரு சாட்சி. கடன் வாங்கி பட்ஜெட் போடும் மாநிலம் தமிழ்நாடு. இதுவரை ரூ.9 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளார்கள். உணவு தானிய உற்பத்தி மூன்று லட்சம் டன் குறைந்திருக்கும் போது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார். கோவையின் வெற்றியை பிரதமர் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார். இந்த மண் நமது தேசிய மண். இங்கு அயோக்கியர்களுக்கு இடம் கிடையாது”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
Advertisement