எந்த மக்கள் பிரதிநிதிக்கும் இது நடக்கலாம் - முதலமைச்சர் கண்டனம்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரமிக்கவர். காவல் துறை இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து சண்டையிட்ட காஷ்மீர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு வருடந்தோறும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.
அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதியான நேற்று முதல்வரான உமர் அப்துல்லா நேற்று அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீசாருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டையிடுவது போன்று போலீசார் தள்ளிவிட்டனர்.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் உமர் அப்துல்லா.
தற்போது இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் அவர் சுவர் ஏறி குதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை பா.ஜ.க அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது. எந்த மக்கள் பிரதிநிதிக்கும் இது நடக்கலாம் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.