For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்” - பிரதமர் மோடி!

06:56 PM Jul 02, 2024 IST | Web Editor
“அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்”   பிரதமர் மோடி
Advertisement

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நேற்று (ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) மக்களவையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அப்போது மோடி பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர். உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி,

“ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு வெற்றியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். 10 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம். இப்போது, ​​நாம் முன்னேறி வரும் வேகம் விரைவில் நம் நாட்டை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக பிரகாசிக்கச் செய்யும். எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம் என்பதாகும். எங்கள் 3-வது பதவிக்காலம் என்பது 3 மடங்கு சக்தியை புகுத்துவோம் என்பதாகும். எங்கள் 3-வது தவணை என்றால் 3 மடங்கு முடிவுகளைக் கொண்டு வருவோம் என்பதாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த நல்ல அதிர்ஷ்டம் நாட்டுக்கு வந்துள்ளது. ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சிக்கான ஆணையை பொதுமக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் சில விஷயங்கள் மக்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டன. மக்களவைத் தேர்தலுடன், நம் நாட்டில் 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த நான்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. நாங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். மஹாபிரபு ஜகந்நாதரின் பூமியான ஒடிசா, எங்களை மிக அதிகமாக ஆசிர்வதித்துள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளோம். சிக்கிமிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த முறை கேரளாவில் பாஜக தனது கணக்கைத் திறந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த எங்கள் எம்.பி.க்கள் மிகுந்த பெருமையுடன் எங்களுடன் அமர்ந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த முறை இருந்ததை விட இம்முறை பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 தேர்தலில் காங்கிரஸுக்கு நாட்டு மக்கள் ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணை என்னவென்றால், வாக்குவாதம் முற்றும் போது எதிர்க்கட்சியில் அமர்ந்து கத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். தேர்தலில் காங்கிரஸ் 100-ஐ தாண்டாதது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். காங்கிரஸின் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய தேர்தல் தோல்வியாகும்.

ராகுல் காந்தி, நேற்று நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். ரஃபேல் குறித்தும், ஹெச்ஏஎல் குறித்தும் ராகுல் காந்தி பொய் பேசியுள்ளார். பொய்மையின் பாதையில் மக்களை அழைத்துச் சென்று நாடாளுமன்றத்தை ஏமாற்ற ராகுல் முயல்கிறார். நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். போர்ச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறோம். போர் விமானங்களை வாங்கிய போது அதை அலட்சியம் செய்தது காங்கிரஸ்.

நாட்டின் முப்படைகளை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். ஒரே நாடு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. நாட்டின் படைகள் பலவீனமடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை 2047-ம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாள்களும் உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் மக்கள் நினைத்திருந்தார்கள். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் எங்களை மக்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத் தயார், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்

காங்கிரஸ் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, பொது அமைதியை மனதில் கொண்டு, சுயபரிசோதனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் தலைகீழ் விமர்சனத்தில் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற ஓர் எண்ணத்தை மக்கள் மனதில் திணிக்க இரவு பகலாக முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் சனாதனத்தை டெங்கு, மலேரியா என குறிப்பிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை கேலி செய்கிறார்கள். இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை கண்டுபிடித்ததே காங்கிரஸ். காங்கிரஸ் சிறு குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. ஒரு குழந்தை இருக்கிறது. அவர் (ராகுல் காந்தி) தனது 99 மதிப்பெண்களை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது ஆசிரியர் ஒருவர் ஆச்சரியப்பட்டு, ஏன் கொண்டாடுகிறீர்கள்? கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்பினார். அவர் பெற்ற '99' மதிப்பெண்கள் 100-க்கு இல்லை, '543'-க்கு! ஆனால், அந்த ஒரு குழந்தையின் புத்திக்கு யார் அதைப் புரிய வைக்க முடியும்?" என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

Tags :
Advertisement