"திட்டமிட்டு ஆளுநர் உரையை புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்" - EPS பேட்டி
ஆளுநர், உரையை புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில் கூடியது. கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை எனக் கூறி ஆளுநர் புறப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என நான் பலமுறை கோரிக்கை விடுத்தேன். நான் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தற்போது போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர். யார் அந்த சார்? என இந்தியாவே கேட்கிறது. ஆளுநர், உரையை புறக்கணித்துச் செல்லவில்லை.
திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவில்லை. அதிமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கினால் தான் இன்று விசாரணை நடந்து வருகிறது. அரசாங்கம் உண்மைக்குற்றவாளியை காக்க நினைக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு கூட இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.