பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது - திருமாவளவன்
பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாம் தேதி இரவு பவுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரின் வீட்டின் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, பெரம்பூர் செம்பியம் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்,
"ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமாது. தமிழகத்தில் முக்கிய தலைவர்களுக்கு
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் உள்ளார்கள். குறிப்பாக பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கடமை, காவல்துறையின் கடமை.இனி மேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழவே கூடாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர், அம்பேத்கரின் கொள்கையை, அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும். சாமானிய தலித் முதல், அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது என்று திருமாவளவன் பேசினார்.