“ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை” - பிரதமர் மோடியின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!
பிரதமர் மோடியின் கார்மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் அணி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“நரேந்திர மோடியின் கார் அணி மீது காலணிகளை வீசிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மற்றும் அவரது பாதுகாப்பில் கடுமையான குறைபாடும் உள்ளதாகத் தெரிகிறது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான நமது போராட்டம் காந்திய வழியில் (அகிம்சை) தான் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை” என பதிவிட்டுள்ளார்.
एक और महत्वपूर्ण बात जो प्रेस कॉन्फ्रेंस में कहनी रह गई।
नरेंद्र मोदी और उनके काफिले पर चप्पल फेंका जाना बहुत ही निंदनीय है और उनकी सुरक्षा में गंभीर चूक है।
सरकार की नीतियों पर अपना विरोध गांधीवादी तरीके से दर्ज कराया जाना चाहिए, लोकतंत्र में हिंसा और नफ़रत की कोई जगह नहीं है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2024
பிரதமர் மோடி தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 19) சென்றார். அங்குள்ள காசி விஸ்வநாத் கோயிலில் கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டு வழிபாடு செய்தபின், கோயிலை நோக்கிச் சென்றுள்ளார். பிரதமர் மோடி சாலை வழியே செல்லும்போது அப்பகுதி மக்கள் அவரை வரவேற்று, ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, பிரதமர் சென்ற கார் அணி மீது காலணி ஒன்று வீசப்பட்டுள்ளது. அதனைக் கண்ட பிரதமரின் பாதுகாவலர், அந்த காலணியை எடுத்து தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1.41 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், ஒருவர் 'செருப்பு வீசப்பட்டது' என்று சொல்வதையும் கேட்கலாம்.
ஆனால் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “பிரதமர் மோடியின் கான்வாய் காரின் மீது கிடந்தது, செருப்பில்லை. அது ஒரு மொபைல் போன் தான் எனக் கூறியுள்ளார்.