"மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்" - இபிஎஸ் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"கடந்த ஒரு வார காலமாக, டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பெருமளவு மழை நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற இதர பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வயல்வெளியும் ஏரி போலவும், கடல் போலவும் காட்சியளிப்பது வேதனைக்குரியதாக உள்ளது.
குறிப்பாக, திமுக அரசு, பருவ மழை ஆரம்பிக்கும் முன்பே வாய்க்கால்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை தூர் வாராததே தற்போதைய நிலைக்குக் காரணம்.
பருவ மழை ஆரம்பிக்கும் முன்பே வாய்க்கால்களை தூர்வார நான் பலமுறை வலியுறுத்தியும் வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை முறையாக தூர் வாருவதற்கான நடவடிக்கைகளை திமுக அரசின் அதிகாரிகள் எடுக்காததால், மழைநீர் செல்ல வழியின்றி வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதனால் ஒருசில நாட்களே பெய்த மழையால், தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கியுள்ளன. கடலூர் மாவட்டம், பரவனாற்றை தூர் வாரி தடுப்புச் சுவர் அமைக்காததால் மீண்டும், மீண்டும் வெள்ளநீர் வயலில் நுழைந்து விவசாயம் பாதிப்படைகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருநல்லூரில் உள்ள வேதபுரி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, வயல்வெளிகளில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மேலும், சேத்தியாதோப்பு பகுதியில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
பட்டுக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் மகாராஜ சமுத்திரம், நசுவினி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி, கோரம்பள்ளம் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், குளத்தின் கரை பகுதியில் அமைந்துள்ள வீரநாயக்கன்தட்டு பகுதியில், சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கருப்பு தோட்டங்கள் சேதமாகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இருந்த வெற்றிலை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர் பகுதியில் தொடர் மழையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.
பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்ததைப் பார்த்து வேளாண் பெருங்குடி மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே வானிலை நிலவரம் மற்றும் மழை பொழிவு குறித்து அறிவித்த பின்பும், வயல்வெளிகளில் தேங்கும் நீரை மடை மாற்றி வெளியே அனுப்ப எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் திமுக அரசின் வேளாண்மைத் துறை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நெற்பயிர்களுக்கான காப்பீடு முறையாக செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. காப்பீடு செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரால் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணமாகவும்; பாதிப்படைந்துள்ள இதர பயிர்களுக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.