“புதிய ரயில் பாலத்தில் பழுதில்லை” - அண்ணாமலை விளக்கம்!
பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று(ஏப்ரல்.06) ரூ.544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறக்கும் வகையில் தாம்பரம் – ராமேஸ்வரம் இடையேன ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் 8300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார். இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் புதிய ரயில் பாலத்தில் பழுதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வே பாலத்தில் அப்படி ஏதும் பழுதாகவில்லை. தூக்குப்பாலம் எப்படி வடிவமைக்கபட்டுள்ளது என்றால் ரயில் கடந்து சென்ற பிறகு, பாலம் மேலே செல்கிறது. ரயில் முழுவதுமாக கடந்து கடைசிக்கு சென்ற பிறகுதான் மறுபடியும் அதை இயக்க முடியும் அப்படிதான் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது யூகத்தின் அடிப்படையில் வெளியான தகவல் தான் அப்படி எதுவும் அனுமதி கேட்கவில்லை. அனுமதி கொடுக்கப்படவும் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.