கால்பந்து விளையாடிவிட்டு ஓய்வெடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்... சென்னையில் அதிர்ச்சி!
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (55). இவரது மனைவி வின்னரசி (48). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், நேற்று (ஏப்.6) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராஜன் காலை 6 மணியளவில் திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்திற்கு சென்றார். அங்கு விளையாடிய ராஜன் காலை 8:30 மணியளவில் விளையாடி முடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது ராஜன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சக விளையாட்டு வீரர்கள் உடனடியாக ராஜனை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் சக விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிக நகர் போலீசார் ராஜனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜனுக்கு இருதய பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. நேற்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.