"மோடி அரசின் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியது" - மாணிக்கம் தாக்கூர் பேட்டி!
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "மோடி அரசின் தொடர் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கி வருகின்றன.
வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒரு முறை கூட எதிர்க்கட்சி தலைவருக்கும் அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இது குறித்து பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மத்திய அமைச்சர்கள் தினம்தோறும் வேதம் ஓதுவது தொடர்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பெங்களூரு திருட்டு வாக்கு குறித்து ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று இதன் மீதான விவாதம் கோரினோம். ஆனால் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. இது கவலை அளிக்கக்கூடிய நடைமுறையாக உள்ளது. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் திங்கட்கிழமை காலை இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி நடைப்பயணமாக செல்ல உள்ளோம். கனிமொழி, டி ஆர் பாலு திருச்சி சிவா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி எடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனோம். இதைவிட மிகப்பெரிய உறுதியான ஆவணம் கிடையாது. தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் செயல்படவில்லை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. பாஜக எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு என்ன காரணம் என்பது இப்பொழுதுதான் ஒன்றின் பின் ஒன்றாக வெளி வருகிறது. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குத் திரட்டு உள்ளடங்கும். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை உரிய முறையில் ஆய்வில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.