For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!

10:54 PM Mar 06, 2024 IST | Web Editor
கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’
Advertisement

டெல்லியில், ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெயிண்டருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகளை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

Advertisement

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

1994-ஆம் ஆண்டு திரைக்கு வந்த டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை கேட்காத இசைப்பிரியர்களே இல்லை என்றே சொல்லலாம்.

இந்த வரிகளுக்கு ஒத்தார்போல் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்து ஒன்று டெல்லியை சேர்ந்த 45 வயதுடைய பெயிண்டர் ஒருவரின் கைகளை இரக்கமின்றி காவு வாங்கிவிட்டது.  பெயிண்டர் தொழிலுக்கு கைகளே பிரதானம் என்பதால், கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து, வேறு எந்த வேலையும் செய்ய இயலாமல் அவர் முடங்கி கிடந்தார்.

இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் இவரது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் பள்ளி ஒன்றின் முன்னாள் நிர்வாகத் தலைவரான மீனா மேத்தா என்பவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஏற்கெனவே பதிவு செய்திருந்தது தெரிய வந்தது.

அவரது தியாகத்தின் மூலம், அவரது இரு கைகளும் தானமாக பெறப்பட்டு, ஏற்கெனவே கைகளை இழந்திருந்த பெயிண்டருக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

மேலும், மீனா மேத்தாவின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கார்னியா ஆகிய உறுப்புகள் மற்ற 3 பேருக்கு வாழ்வளித்துள்ளது. இதன் மூலம் மீனா மேத்தா 4 பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார்.

இதில், பெயிண்டருக்கு இரு கைகளை பொருத்த மருத்துவ குழுவினர் மிகவும் கடினமான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமனி, தசை, தசை நாண்கள் மற்றும் நரம்புகளை இணைக்கும் சவாலான சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருந்த மீனா மேத்தாவின் பெருந்தன்மையை குறிப்பிட்டும் அவற்றை வெற்றிகரமாக மற்றவர்களுக்கு பொருத்திய மருத்துவ குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags :
Advertisement