”எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்”- டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!
சமீபத்தில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு அரசு தான் என பெருமிதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பதும் ஒரு மாய விளம்பரம்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தமிழ் நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“தமிழ்நாட்டு மக்களும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் கடுமையாக உழைத்ததன் விளைவாக, தமிழ்நாடு விரைவாக வளம் பெற்று இன்று 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது . தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து நமது மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்ற இந்த வேளையில், ஒரு தமிழனாக அதைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். பா.ஜ.கவைப் போலவே தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதை அதன் கூட்டாளியான அதிமுகவும் வாடிக்கையாக வைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பற்றிய எந்தவொரு நல்ல செய்திக்கும் அவர்களின் எதிர்வினை இப்படித்தான் அமைந்துள்ளது என்பது வேதனைக்குரியதாகவும், அவர்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதைக் காட்டும் விதத்திலும் உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் அயராத உழைப்பும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசின் அனைவருக்குமான வளர்ச்சிக் கொள்கையுமே காரணமாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, நிலம் வாங்கி விற்றல் (ரியல் எஸ்டேட்), உணவு விடுதிகள் (ஹோட்டல்) ஆகியவற்றால் நிகழ்ந்தவை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவரது இந்த அரைவேக்காடு வாதத்தின்படி பார்த்தால்கூட, இத்தொழில்கள் செழிக்க, தமிழ்நாட்டு மக்கள் இவற்றில் செலவிட வேண்டுமல்லவா? அவர்களுக்கு அந்த வருமானம் எங்கிருந்து வருகிறது என்று அவர் சிந்திக்க மாட்டாரா?. இந்தக் கேள்வி அவருக்குத் தோன்றாதது வியப்பளிக்கிறது.
மாநிலப் பொருளாதாரத்தில் குன்றா வளர்ச்சி, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் மந்திரமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசினால் தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகிறது. முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் ஏற்பட்டதுதான் இந்த வளர்ச்சி. மகளிர் நலனை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் கொள்கைகளினால் மக்கள் தொகையில் சரிபாதியினர் அதிகாரம் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மையுடன் வளர்கிறது. மின்கட்டண உயர்வு குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெட்கப்பட வேண்டும். உதய் திட்டத்தில் கண்மூடித்தனமாக கையொப்பமிட்டு தமிழ்நாட்டை அடகு வைத்தவர் இது குறித்து வாய் திறக்கலாமா?பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லியிடம் அடமானம் வைக்கப்பட்டதை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புரிந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இன்னும் விளக்கமாகப் பதில் சொல்லலாம். ஆனால் சொந்த மண்ணின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? இது மக்களுக்கான நம் விளக்கம்” என்று தெரிவித்துள்ளார்.