”ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது”- மல்லிகார்ஜுன கார்கே!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 வை வெளியிட்டுள்ளார். இதன்படி ஜிஎஸ்டி வரி எளிமையாக்கப்பட்டுள்ளது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆக இருந்த ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்ககளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீர்த்திருத்தங்கள் வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றன. அதே வேளியில் 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனவும் எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தாமதமாக இருந்தாலும், ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் கும்பகர்ண தூக்கம் இறுதியாக விழித்தெழுந்திருப்பது வரவேற்க்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இந்திய தேசிய காங்கிரஸ், கடந்த 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு தற்போது ஒரு தேசம், ஒரு வரி என்பதை ஒரு தேசம், 9 வரிகளாக மாற்றியது. இதில் 0%, 5%, 12%, 18%, 28% வரி அடுக்குகள் மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% சிறப்பு விகிதங்கள் அடங்கும். காங்கிரஸ் கட்சி தனது 2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கையில் எளிமையான வரி முறையுடன் ஜிஎஸ்டி 2.0 ஐக் வலியுறுத்தியிருந்தது. MSME மற்றும் சிறு வணிகங்களை கடுமையாக பாதித்த ஜிஎஸ்டியின் சிக்கலான வரிமுறையினை எளிமைப்படுத்தவும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். 2005 பிப்ரவரி 28 அன்று, காங்கிரஸ் அரசாங்கம் மக்களவையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி மசோதாவைக் கொண்டு வந்தபோது, பாஜக அதை எதிர்த்தது. மேலும் முதலமைச்சராக இருந்த மோடி ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தார். இன்று, அதே பாஜக அரசுஜிஎஸ்டி வசூலை சாதனைபோல கொண்டாடுகிறது.
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயிகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மோடி அரசு விவசாயத் துறையில் குறைந்தது 36 பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளது. பால்,தயிர், மாவு,தானியங்கள், குழந்தைகளின் பென்சில்கள்,புத்தகங்கள் போன்ற அன்றாட பொருட்களுக்கு கூட, மோடி அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. அதனால்தான் இந்த பாஜகவின் ஜிஎஸ்டியை "கப்பர் சிங் வரி" என்று பெயரிட்டோம். மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது, 64%, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து வருகிறது, ஆனால் கோடீஸ்வரர்களிடமிருந்து 3% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் 30% இலிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், வருமான வரி வசூலில் 240% அதிகரித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வசூலிலில் 177% அதிகரித்துள்ளது.
8 ஆண்டுகள் தாமதமாக இருந்தாலும், ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் கும்பகர்ண தூக்கம் இறுதியாக விழித்தெழுந்திருப்பது வரவேற்க்கதக்கது. 2024-25 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும் ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல்கள் அகற்றப்பட வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.