வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் - தீயணைப்பு வீரர் கைது!
பரமத்தி வேலூர் அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம், அவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை தம்பதி வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், கடந்த 2 மாதங்களாக சந்தேகப்படும் நபர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அறிவியல் பூர்வமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த ஜனார்த்தனன் (32) என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
விசாரணையில் தனக்கு அதிக கடன் இருந்ததாகவும் தன்னுடைய பண தேவைக்காக கடந்த அக்.10-ம் தேதி சண்முகம் வீட்டிற்கு சென்று திருடும் போது சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தடுத்ததால் பக்கத்தில் இருந்த கடப்பாறையை எடுத்து இருவரின் தலையிலும் தாக்கி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
மேலும், நல்லம்மாளிடம் இருந்த தாலி செயின் மற்றும் சுமார் 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர் ஜனார்த்தனனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.