“தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்!” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாராளுமன்றவாரியான கருத்து கேட்பு கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் பேசியதாவது:
இன்றைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் 39
தொகுதியில் இருக்கக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து
நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதனுடைய ஒரு பகுதியாக இன்றைக்கு தென் சென்னை நாடாளுமன்றத்திற்குட்பட்ட
பகுதிகளில் நமது நிர்வாகிகள் கூட்டத்தில் யார் யார் வேட்பாளராக வரலாம் அல்லது
நீங்கள் யாரை பரிந்துரைக்கிறீர்கள் என்ற கருத்து கேட்கும் கூட்டமானது
நிர்வாகிகள் இடத்தில் கேட்கப்பட்டு இருக்கிறது. விரைவில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
திருப்பூர் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, அதே போல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடத்த நிகழ்ச்சிகள் இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் என பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும், எங்கள் NDA கூட்டணி வெற்றி பெறும். தேசிய வேட்பாளர் பட்டியல் பொறுத்த வரையில் நான் ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால், நிச்சயமாக விரைவிலேயே தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
போதை கலாச்சாரம் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி போயிருக்கிறது. அதில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிர்வாகிகள் அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறார்கள். அந்த நபர் திராவிட முன்னேற்ற கழகத்தில் பொறுப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் அந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் பொறுப்பில் இருந்திருக்கிறார்.
இதெல்லாம் நமக்கு ஒரு அவமானமாக இல்லையா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒரு போதைப் பொருள் அதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய், அதாவது 3,500 கோடிக்கு மேல் போதை பொருள் கடத்தியிருக்கிறார்கள்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொழுது இன்னும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் போது மேலும் விவரங்கள் தெரியவரும். போதைப் பொருள்கள் தான் கடத்தினார்களா? இல்லை தேச விரோத செயல்களில் ஈடுபட்டார்களா? ஆயுத கடத்தலில் ஈடுபட்டார்களா? எதிராக செயல்பட்டவர்களா? என்பதெல்லாம் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீக்கப்பட்ட நிர்வாகியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீக்கப்பட்ட நிர்வாகியையும் பிடித்த விசாரிக்கும் பொழுது இந்த உண்மைகள் தெரிய வரும் அதுவும் அவர்கள் விசாரிக்கப்பட்டு இந்த பண பரிமாற்றம் அல்லது யார் யாருக்கு சென்று இருக்கிறது அந்த பணப்பரிமாற்றம் அவர்களிடத்தில் இருந்து வேற யாராவது முக்கியமான நபர்களுக்கு சென்று இருக்கிறதா என்பதெல்லாம் குறிப்பாக என் சி பி யினுடைய விசாரணையில் தான் எல்லாம் தெரிய வரும்.
அந்த நபர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் அவர்களை கைது செய்யும் பட்சத்தில் மற்ற உண்மைகளும் வெளியே வரும் என்று தான் நாம் எதிர்பார்க்கிறோம். போதை பொருள் விவகாரம், விசிக, திமுக நிர்வாகிகள் தொடர்பு யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது விசாரணை செய்ய வேண்டும், தமிழகத்தில் போதை கலாச்சாரம் துவங்கியுள்ளது. எய்ம்ஸ் கட்டுமான இன்று தொடங்கப்பட்டாலும் ஏற்கனவே அங்கே கல்லூரி செயல்பட்டு வருவது என்பது கூடுதல் தகவல்.
குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் அந்த மாநில அரசு விழிப்புடன் இருந்து தமிழகத்திற்கு கடத்த இருந்ததை கைப்பற்றியது. தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட போதை பொருள், தான் குஜராத்தில் பிடிபட்டது.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன் கட்டுமான பணி துவங்கியுள்ளது, கூடுதல் தகவலாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஏற்கனவே செயல்படுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.