எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குப்பிகளை மக்களவையில் வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை, மக்களவைக்குள் புகுந்த இருவர் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் (டிச. 14) எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமலியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி ஒருவர், மற்றும் மக்களவையில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன் உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, நேற்றும் (டிச. 15) சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'இது ஜனநாயக விரோதம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இது குறித்து நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி ஆகியோர் முதலமைச்சருடன் பேசியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்பிக்கள் 1 மாத ஊதியத்தை நிதியாக வழங்கினர்.